இயல் குரல் கொடை - பாரதி புத்தகாலயம் இணைந்து தன்னார்வலர்கள் முயற்சியில் ஒலி புத்தகத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள சிறுகதை. சிறுகதை எழுதியவர் ச.தமிழ்செல்வன். வாசித்தவர் தேவிகா.
வாசிப்பு அனுபவம்: காதல் இல்லாத வாலிபமா? என சிலாகித்தான் அரசவைக்கவி கண்ணதாசன். மாடமாளிகைகளிலும் பளிங்கு கோபுரங்களிலும் முகிழ்ப்பது மட்டுமே காதலல்ல. கரிசல் காட்டிலும் கரும்பன்றிக் கொட்டிலிலும் காதல் வரும். பிறந்தது முதலே தங்கராசு மச்சானை பார்த்துப் பார்த்து காதல் வளர்த்த மாரியம்மா அவனை சிலபல காரணங்களால் கைபிடிக்காமல் போன பின்பும் நெஞ்சாங்கூட்டில் அடைகாத்து வைப்பதும், அவன் மனைவி மேலும் அந்த அன்பினை விரிவாக்கம் செய்பவளாய் ... 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்பதற்கு விடையாய் இருக்கிறாள். தன் கணவனோடு கொண்ட இல்லறத்தில் மகிழ்வாகவே இருப்பவள், அந்த இன்பம் ஆசை மச்சான் தங்கராசுவிற்கு அவனது வாழ்க்கையில் இல்லை என தெரிய வந்ததும்
நொறுங்கிப் போகிறாள். ச. தமிழ்ச்செல்வனால் மட்டுமே இப்படி படிப்போர் கண்களை ஈரமாக்கி இதயத்தில் துயரத்தை இறுக்கிப் பிழிய இயலும். கதை படித்து முடித்த பிறகும் அந்த மாரியம்மாளும் அவளது தங்கராசு மச்சானும் எங்கோ ஓர் இடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இதுதான் "பூ" என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டு மனதில் நின்றது.