ஒன்றுகொ லாமவர்
சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய
ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு
வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர்
ஊர்வது தானே. 1இரண்டுகொ லாமிமை
யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங்
குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு
வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர்
எய்தின தாமே. 2மூன்றுகொ லாமவர்
கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர்
சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை
கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர
மெய்தன தாமே. 3நாலுகொ லாமவர்
தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன
னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர்
ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை
பாடின தாமே. 4அஞ்சுகொ லாமவர்
ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர்
வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர்
காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர்
ஆடின தாமே. 5ஆறுகொ லாமவர்
அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர்
தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர்
தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை
யாக்கின தாமே. 6ஏழுகொ லாமவர்
ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர்
கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர்
ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை
யாக்கின தாமே. 7எட்டுக்கொ லாமவர்
ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர்
சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர்
தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை
யாக்கின தாமே. 8ஒன்பது போலவர்
வாசல் வகுத்தன
ஒன்பது போலவர்
மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர்
கோலக் குழற்சடை
ஒன்பது போலவர்
பாரிடந் தானே. 9பத்துக்கொ லாமவர்
பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி
றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர்
காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி
யார்செய்கை தானே. 10இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம் நீங்கும்படி அருளிச்செய்தது.