20 ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த திரு.கு.அழகிரிசாமி செப்டம்பர் 23,1923 ல் இடைசேவல் கிராமத்தில் குருசாமி-தாயம்மாள் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார்..தமிழ் சிறுகதைகள் மட்டுமல்லாது கட்டுரை,புதினங்கள்,நாடகங்கள்,கவிதைகள்,கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்தவர்..”அன்பளிப்பு” சிறுகதை தொகுப்பிற்காக சாகித்ய அகடமி விருது பெற்றவர்.. எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் தனது ‘களங்கமின்மையின் சுடர்-‘ கு.அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்.. “ தமிழ் சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய ராஜா வந்திருக்கிறார்,அன்பளிப்பு,தம்பி ராமையா,பேதமை ஆகிய 4 கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை,ஏக்கத்தை,அறியாமையை, குழந்தைகளோடு குழ்ந்தையாக இருந்து எழுதியிருப்பதை உணர முடியும். ஒரு வகையில் ராஜா வந்திருக்கிறார் கதை கு.அழகிரிசாமியின் மையம் என்று கூட சொல்லலாம்.அவர் அந்த வாழ்க்கையின் அவலத்தை எத்தனை நெருக்கடிகள் வந்தாலும்,துன்ப துயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும்,மங்கம்மாவைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும் தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும் அதில் வெற்றிபெறவும் முடியும் என்பதை சொல்கிறமிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு. அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார்...”