திமுகவின் பிரச்சார செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சிட்டிபாபு. மிசா காலத்தில் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். அந்த கொடுமைகளை “ஆயுள் கைதியின் அனுபவங்கள்” என்ற தலைப்பில் சிறைக்குள் இருக்கும்போதே தொகுத்தார். பின்பு அவர் மறைவிற்குப் பின் அவர் குடும்பத்தாரிடம் பாதுகாப்பாக இந்த டைரி சேர்க்கப்பட்டு பின்னர் “சிட்டிபாபுவின் சிறை டைரி” என ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது. 1931ஆம் ஆண்டு பிறந்தவர் சிட்டிபாபு. திராவிட இயக்கத்தின் தலைசிறந்த படைப்பாளியாகவும் இவர் திகழ்ந்தார். சிறந்த பேச்சாளராகவும் வலம் வந்தவர்.
1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி திமுக ஆட்சி இந்திராகாந்தி அம்மையார் கொண்டு வந்த நெருக்கடி நிலையால் கலைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் காரணம் இன்றி கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலையை இந்திராகாந்தி அம்மையார் கொண்டு வந்தபோது இந்தியத் துணைக்கண்டத்தில் அதை மக்களாட்சிக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என எதிர்த்த கட்சி திமுக மட்டுமே. 1.2.1976 அன்று காலை சர்வாதிகாரத்தால் கைது செய்யப்பட்ட சிட்டிபாபு தொடர்ந்து சிறைக்குள் தாக்கப்பட்டார். அதன் காரணமாக 31.10.1976 ஆம் ஆண்டு அவர் சென்னை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5.1.1977 காலை 8:50 மணிக்கு அவர் மறைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அவரின் இந்த நூல் சிறைக்குள் நடந்த அடக்குமுறைகளை விவரிக்கின்றது. தாம்பரம் திடலில் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு துண்டுச் சீட்டு வழங்கப்படுகின்றது. அதில் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி.
அந்தக் கூட்டத்தில் செய்தி பரவியதும் தொண்டர்கள் கொதித்தெழுகின்றனர். அவர்களிடம் பேரறிஞர் அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதை நினைவுபடுத்திவிட்டு கலைஞர் அவர்களை சந்திக்கச் செல்கின்றார். கலைஞர் அவர்கள் கலக்கம் இன்றி காட்சியளித்தார் என எழுதுகின்றார். பின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு சிறை செல்கின்றார். சிறையில் அடைக்கப்படும்போதே கைது செய்து வந்தவர்களைத் தகாத சொற்களால் சிறை அதிகாரிகள் வசை பாடுகின்றனர்.
அதனை தன் எழுத்தில் சிட்டிபாபு அவர்கள் இவ்வாறு பதிவு செய்கின்றார். “சந்தனக் கிண்ணமும் சாணிக் கூடையும் அதனதன் குணத்தைக் காட்டிவிடும் அதைப்போல அதிகாரத்தின் சாயலை அன்று பார்த்தேன்”
திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றனர். அப்போது நள்ளிரவு ஒரு மணிக்குத் திருமணமாகி சில மாதங்களான இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைவர் ஸ்டாலின் அழைத்து வரப்பட்டார் என்ற செய்தியையும் அவர் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட பன்னிரண்டு நாட்களுக்கும் மேல் சிறையிலேயே முழு நேரம் அடைக்கப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
“கதவு திறந்தது யார் முன்னே வெளியில் செல்வது என்ற நிலை! காலம் கதவுகளை மூடப்போவதில்லை. அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்கள் அல்லவா நாங்கள், எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமாக நானே முதலில் வெளியில் வந்தேன். பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்! எனவே ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள் அட டா… நிலைக் கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்தது போல் எனக்குத் தோன்றியது. கண்கள் கணநேரம் காண்பது எல்லாம் கார் இருள் போல் இருந்தது…. தள்ளினார்கள் மதில் சுவர்மீது சட்டென்று திரும்பிக்கொண்டேன்! வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்! சுவரின் மீதே சாய்ந்து உட்கார நினைத்தேன்! ஆனால் நீண்ட நெடுமரத்தை மதயானை இடைக்காலாலும் வலக்காலாலும் துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பதுபோல் உதைத்தனர்.”
சிறையல்ல சித்தரவதைக் கூடம் என்ற தலைப்பில் அவரையும் மற்றவர்களையும் எவ்வாறு அதிகாரிகள் தாக்கினர் என எழுதியுள்ளார்.
Chitibabu's Prison Diary - MV.Kanimozhi || சிட்டிபாபுவின் சிறை டைரி - ம.வீ. கனிமொழி || புத்தகம் பேசலாம் || பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா