கலைஞர் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சி- புத்தகம் பேசலாம் - கலைஞர் என்றொரு ஆளுமை
அரசியல், கலை என விரிந்திடும் கலைஞரின் வாழ்க்கை குறித்த பதிவுகள், தமிழக அரசியலில் ஒரு காலகட்டத்தின் வரலாறாகும். திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தமிழர்களின் மனதில் இடம் பிடித்த கலைஞரின் ஓட்டம், வெற்றி தோல்வியைக் குறித்த பிரேமை இல்லாமல் தொடர்ந்தது. இளம் வயதிலே முதலில் நாடகம், பின்னர் திரைப்படம் எனப் பொருள் ஈட்டிய கலைஞரின் அரசியல் வாழ்க்கை, சாதியரீதியில் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வில் விடியலை முன்னிறுத்தியது. சமூகத் தேவையின்பொருட்டு வரலாறு தேர்ந்தெடுத்து உருவாக்குகிற மாபெரும் ஆளுமைகள், எப்பொழுதும் தனிச்சிறப்புடையவர்கள். இன்னொரு நிலையில் சமூக வரலாற்றில் பாத்திரமாக உருவாகி, ஒரு காலகட்டத்தின் சமூகச் செயல்பாடுகள்மீது ஆதிக்கம் செலுத்துகிற ஆளுமைகள், ஒரு கட்டத்தில் வரலாற்றை உருவாக்குகிறவர்களாக மாறுகின்றனர். பல நூற்றாண்டுகளாக வைதிக இந்து சமயத்தின் ஆதிக்கத்தில் சம்ஸ்கிருத மொழியின் ஆளுகையுடன் போராடிக்கொண்டிருந்த தமிழ் மொழியானது தெலுங்கு, மராட்டி, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழை முன்வைத்து நடைபெற்ற அரசியல் என்பது ஒருவகையில் தமிழர் பண்பாட்டு அடையாள அரசியலாகும். அதன் முகமாக நிற்கிறார் கலைஞர்.