’’ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் விழும்’’ என்கிற மோடியின் வார்த்தைகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் கடைக்கோடி இந்தியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் நரேந்திர மோடி. பத்தாண்டு மன்மோகன் சிங் ஆட்சியை வீழ்த்த மோடியைக் கொண்டு வந்தது பா.ஜ.க. ‘மோடி மேஜிக்’ என வர்ணிக்கப்பட்ட 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடி உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அக்னி குஞ்சுகள்.
குஜராத் முதல்வராக இருந்த போதே மோடி பொய்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி சொன்ன வாக்குறுதிகள் இந்தியாவையே கலங்கடித்தன. மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 5,827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற மோடி சொன்ன பொய்களை எல்லாம் சேகரித்து போஸ்ட் மார்ட்டம் செய்திருக்கிறது இந்த புத்தகம்.
மோடி பிரதமர் ஆன ஐந்து ஆண்டுகள் கழித்து, 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட போது 2014 தேர்தலில் அவர் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் மீண்டும் தேடி எடுத்து நீண்ட கட்டுரையாக வெளியிட்டது விகடன். அதன் விரிவாக்கம் செய்யப்பட்ட நூல் வடிவம் இது.
``நாட்டை மீட்பதற்காக கடவுள் என்னைத் தேர்வு செய்துள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்'' என்றார் மோடி. அந்த மாற்றம் நடந்ததா? என்பதை அலசுகிறது நூல்.
எழுத்தாளர் பரக்கத் அலி எழுதிய 'மோடி சொன்ன பொய்கள்' புத்தகத்திற்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை!